அருள்நெறிச் சின்னம் விளக்கம்
அருள்நெறிச் சின்னம்
அருள்நெறித் திருக்கூட்டத்தின் சின்னம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை ஓம்,கோபுரம்,“என் கடன் பணி செய்து கிடப்பதே”என்பவை.
ஓம் எனும் பிரணவ மந்திரம் முத்தி நெறித் தியானப் பொருள்;பெரிய உபதேசம்;சித்தாந்த முடிவு;சிவபெருமானைத் தொழும் வணக்கப் பொருளாம் இறை ஆகியவற்றைக்குறிப்பது. ஒரு குரு மூலமே அறியத்தக்க இப்பெரிய நெறியை இறைவனே சிவகுருவாக வந்து உபதேசம் செய்தார். எனவே இது சிவசொரூபமாகவும் அருவமான நாதசொருபமாகவும் உள்ளது.
கோபுரம் : சிவன் கோவில்களின் கருவறையில் இறைவன் அருவுருவ நிலையில் இலிங்கமாக அமர்ந்து அருளுவார். அக்கோயில்களில் கருவறையின் மேல் எழுப்பப்படும் விமானமும் பிரதான வாயிலில் எழுப்பப்படும் கோபுரமும் தூலலிங்கம் எனப்படும். இவை வெகு தூரத்திலிருந்தே காணக்கூடியவை. இவற்றை வணங்கினால் கோடி புண்ணியம் என்பர்.
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் வாசகம் சிவாலயங்கிளில் உழவாரப் பணி செய்து தாசமார்க்கத்தை உணர்த்திய அடியாராகிய அப்பர் சுவாமிகளின் வாக்கு. இதுசிவனடியார்களை நினைவூட்டுவது. இவர்களைச் சிவனாகவே கொள்வது சைவசமயம்.
எனவே இவை மூன்றும் இணைந்துள்ள இச்சின்னம் இறைவனை அருவம்,அருவுருவம், உருவம்ஆகிய நிலைகளில் வழிபடுவதோடு சைவ சமயம் வலியுறுத்தும் குரு – லிங்க – சங்கமவழிபாட்டையும் குறிப்பதாகும்.